Wednesday, August 28, 2024

கன்னியாகுமரி கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம்.. முழுவீச்சில் நடக்கும் பிரமாண்ட தூண்கள் அமைக்கும் பணி!

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமையும் கண்ணாடி பாலத்துக்காக, திருவள்ளுவர் சிலை அருகிலும், விவேகானந்தர் நினைவு மண்டபம் அருகிலும் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது பாலத்தின் இரு பக்கத்தையும் இணைக்கும் ஆர்ச் அமைப்பு பொருத்துவதற்கான இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஆய்வு செய்துள்ளார்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் தென் கோடி முனையான கன்னியாகுமரியில் அதிகாலை சூரிய உதயத்தையும், மாலையில் அஸ்தமனத்தையும் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தியாவின் பல இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் குமரிக்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரியில் அழகு நிறைந்த கடற்கரைகள், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜா் நினைவு மண்டபம், மகாத்மா காந்தி மண்டபம், திற்பரப்பு அருவி உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன.

கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிடுவது வழக்கம். விவேகானந்தர் நினைவு மண்டபம் படகு தளத்தில் ஆழம் அதிகம் இருக்கும். திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவு. மேலும் அப்பகுதியில் பாறைகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக கடலில் நீரோட்டம் குறைவாக இருக்கும் காலங்களில் படகு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு பாறையையும் இணைக்கும் வகையில், ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் கட்டுமான பணியானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.37 கோடியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் பாலம் அமைகிறது. அதிகபட்ச கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இந்த கண்ணாடி பாலம் அமையும். இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடக்கும் போது, கீழே கடல் அலையை ரசிக்க முடியும்.

இதற்காக கடலில் 27 அடி உயரத்தில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு, கண்ணாடி பாலம் பொருத்தப்படும். கடல் நடுவே அமைவதால், உப்புக் காற்றால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் மற்றும் 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடிப் பகுதியும், இரண்டு பக்கங்களில் கல் மண்டபமும் அமைக்கப்படுகிறது.

இணைப்பு பாலத்துக்கான கூண்டு, முதல் தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள் மூலம் புதுச்சேரியில் வடிவமைத்து தயார் செய்யப்பட்டது. இது மொத்தம் 222 டன் எடை கொண்டது. மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் சிலை அருகிலும், விவேகானந்தர் நினைவு மண்டபம் அருகிலும் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

தற்போது பாலத்தின் இரு பக்கத்தையும் இணைக்கும் ஆர்ச் அமைப்பு பொருத்துவதற்கான அடித்தள பணியான இரும்பு தூண்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. இந்த பணியை பார்வையிட நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் கன்னியாகுமரி வந்தார்.



No comments:

Post a Comment

Featured Post

Melmaruvathur Adhiparasakthi: A Deep Dive into the Divine Mother’s Abode: History, Beliefs, Architecture, Spiritual Power, Festivals

Melmaruvathur Adhiparasakthi Temple    👉   Route map   Arulmigu Adhiparasakthi Siddhar Peetam is a Hindu temple in Melmaruvathur, approxim...

Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe